ஊராட்சி மன்றத் துணைத் தலைவரின் கணவர் மற்றும் ஊராட்சி மன்றச் செயலரால் மறுக்கப்பட்ட கொடியேற்றும் உரிமையை, இன்று மீட்டெடுத்தார் ஊராட்சி மன்றத் தலைவியான பட்டியலினத்தைச் சேர்ந்த அமிர்தம்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே பட்டியலினத்தைச் சேர்ந்த ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவியான அமிர்தம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, எஸ்.பி.அரவிந்தன் முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கொடியேற்றினார். மேலும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் முறைப்படி அமர்ந்து தனது உரிமையை நிலைநாட்டினார் அமிர்தம்.
கொடியேற்றிய ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தத்துக்கு மலர்கொத்துக் கொடுத்து மாவட்ட ஆட்சியர் மரியாதை செய்தார்.
அதைத் தொடர்ந்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, "பஞ்சாயத்துத் தலைவர் அமிர்தத்துக்கு அனைவரும் ஒத்துழைப்புக் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊராட்சி மன்றச் செயலாளர் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.