Skip to main content

கடையில் ஓட்டை போட்டு ஆட்டையைப் போட்ட திருடர்கள்; தங்க நகைகள், வைரங்கள் கொள்ளை 

Published on 10/02/2023 | Edited on 10/02/2023

 

Thieves have looted gold jewellery diamonds from  jewellery shop Chennai

 

சென்னையில் நகைக் கடையின் ஷட்டரை வெல்டிங் மிஷினால் வெட்டி கடையில் இருந்த 9 கிலோ தங்க நகைகள் மற்றும் 20 லட்சம் மதிப்புள்ள வைரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சென்னை பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வருபவர் நகைக் கடை அதிபர் ஸ்ரீதர்(36). இரண்டு மாடிகள் கொண்ட இவரது வீட்டில் இரண்டாவது தளத்தில் ஸ்ரீதர் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். முதல் தளத்தில் ஜே.எல் என்ற பெயரில் கடந்த 8 வருடங்களாக நகைக் கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று இரவு நகைக்கடையில் வியாபாரம் முடிந்து ஊழியர்கள் கடையைப் பூட்டி சாவியை ஸ்ரீதரிடம் கொடுத்துச் சென்றனர். இன்று காலை சுமார் 9 மணியளவில் ஸ்ரீதர் கடையைத்  திறப்பதற்காக வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க ஷட்டர் வெல்டிங் மிஷினால் வெட்டியிருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உள்ளே சென்று பார்த்தபோது, கடையினுள் இருந்த லாக்கர் ரூம் கதவை அடையாளம் தெரியாத நபர்கள் வெல்டிங் மிஷினால் கட் செய்து உள்ளே இருந்த 9 கிலோ தங்க நகைகள், 20 லட்சம் மதிப்புள்ள வைரங்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. 

 

மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. உடனே ஸ்ரீதர் திருவிக நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் உயர் அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

 

கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டுள்ளது. கூடுதல் ஆணையர் மற்றும் இணை ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் குற்றவாளிகளைப் பிடிக்க 3 உதவி ஆணையர்கள் தலைமையில் 9 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்