நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சின்னத்தை திராட்சை கொத்து என பலர் வாட்ஸ் அப்பில் தவறாக பரப்புவதாக குற்றச்சாட்டையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
ராமநாதபுரத்தில் திறந்தவெளி வேனில் பிரச்சாரம் மேற்கொண்ட ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ''நான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறேன். சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுபவர்கள் மூன்று சின்னங்களைக் குறிப்பிட வேண்டும். நான் மூன்று சின்னங்களைக் குறிப்பிட்டு கொடுத்திருந்தேன். இப்பொழுது நிறைய பன்னீர்செல்வங்கள் வந்து விட்டார்கள். என்னுடன் சேர்த்து ஆறு பன்னீர்செல்வம். மற்ற ஐந்து பேரும் நான் என்னென்ன சின்னம் எழுதிக் கொடுத்தேனோ அதே சின்னத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள். ஒரு குழப்ப சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று அப்படி செய்துள்ளார்கள். இப்பொழுது என்ன செய்திருக்கிறார்கள் என்றால், குசும்பு பாருங்க, ஓபிஎஸ் சின்னம் வாளி என வாட்ஸ் அப்பில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஓபிஎஸ் சின்னம் திராட்சை கொத்து என வாட்ஸ் அப்பில் பரப்புகிறார்கள்.
நான் எழுதிக் கொடுத்த மூன்று சின்னங்களையும் ஓபிஎஸ் சின்னம் ஓபிஎஸ் சின்னம் என்று செல்லில் இன்று பறக்கவிட்டு வருகிறார்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல். ஒரு சின்னத்தை இரண்டு வேட்பாளர்கள் கேட்டால் குலுக்கள் முறையில் கொடுப்பார்கள். சின்னம் ஒதுக்குவது குறித்து நேரம் காலம் ஒதுக்கப்பட்டது. உங்களுடைய வாழ்த்துக்களால், ஆசிர்வாதத்தால் நீங்கள் தந்த வரத்தினால் முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் சின்னம் கிடைத்துள்ளது. அது உங்களால் தான் கிடைத்தது. உங்கள் ஆசியால் எனக்கு இந்தச் சின்னம் கிடைத்தது''என்றார்.