நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிலையில், செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசுகையில், “நம்ம வேட்பாளர் வாராரு, மாவட்டச் செயலாளர் வாராரு, எம்.எல்.ஏ வாராருன்னு வீட்டுக்கு வீடு தேங்காய் வாங்கி கொடுத்து விடுவார்கள். வீட்டுக்கு வீடு ஒரு சால்வை வாங்கி கொடுத்து விடுவார்கள். நான் கூட்டிட்டு வருவேன் நீங்கள் சால்வை போடுங்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் செய்தீர்கள் என்றால் டைம் வேஸ்ட். மத்த ஊருக்கு போவதெல்லாம் கெட்டுப் போய்விடும். அதேபோல் ஜீப் வருகிறது என்றால் இப்பொழுது வைத்தார்களே பட்டாசு அது மாதிரி பட்டாசு வைப்பார்கள். அது ஒரு அரை மணி நேரத்திற்கு வெடிக்கும். அதனால் ஊரே காலி ஆகிவிடும். தயவு செய்து சொல்கிறேன், பட்டாசு யாராவது வைத்தார்கள் என்றால் நிச்சயமாக கட்சியில் இருந்து எடுத்து விடுவார்கள். ஜாக்கிரதை கண்டிப்பாக சொல்கிறேன். சிரிக்கிறதுக்கு சொல்லவில்லை உண்மையாகவே சொல்கிறேன்.
நான் பலமுறை சொல்லிவிட்டேன். இந்த மாதிரி பட்டாசு வெடிக்காதீங்க என்று. இரவு 10 மணியோடு பிரச்சாரத்தை முடிக்கணும். நாளை மாலை நம்முடைய இளைஞர் அணி செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் ஆலந்தூர் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு பல்லாவரம் தொகுதிக்கு வருகிறார். அதனால் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய கூட்டத்தை நாம் காட்டியாக வேண்டும். கூட்டணி கட்சித் தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். நம்ம தோழர்களும் அதிக அளவில் வரவேண்டும். குறைந்தது 15 ஆயிரம் பேருக்கு மேல் அங்கு கூட்டம் இருக்கணும். பக்கத்திலேயே நாளைக்கு எடப்பாடி பழனிசாமி கூட்டம் நடைபெறுகிறது. அந்தக் கூட்டம் பிசுபிசுத்து போய்விட வேண்டும். நம்ம கூட்டம் தான் மிகப்பெரிய கூட்டம் என்பதை அதிமுககாரங்க உணரணும். நம்ம கதை முடிஞ்சு போச்சு என நாளைக்கே அவங்க முடிவு பண்ணனும்.
இங்கு காங்கிரஸ் மாவட்ட தலைவர் பேசும்போது சொன்னார், எங்கு வீக்கா இருக்குதோ அங்குதான் கவனம் செலுத்த வேண்டும் என்று. அங்கெல்லாம் கவனம் செலுத்த வேண்டியது இல்லை. எங்கு நல்லா இருக்குதோ அங்கதான் கவனம் செலுத்தணும். நீ அங்கு போய் ஓட்டு போடாதவன் கிட்ட போயிட்டு எத்தனை வாட்டி போய் கேட்டாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு எங்க நல்லா இருக்கானோ அவன் கால்ல போய் விழு. அவன் ஓட்டு போடுவான். இது நம்ம தந்திரம் கற்றுக்கொள். இது எங்க வேலை. ஓட்டு போடாதவங்க கிட்ட நீ போய் தொங்கிக்கிட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை. என்னதான் கால்ல விழுந்தாலும் ஓட்டு போட மாட்டான். நம்ம ஆளு ஓட்டு போடுறவன் இருக்கிறான். அவர்கள் கிட்ட போய் ஓட்டு கேளுங்க. டைம் வேஸ்ட் பண்ணாதீங்க'' என்றார்.