நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்பொழுது, “பெற்றோர்கள் முன்னால் மாணவனைக் கண்டித்ததால் மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளான். இதற்குக் காரணம் போதை. போதை என்னவெல்லாம் செய்கிறது என்று உங்களுக்குத் தெரியும்.
தமிழகத்தில் நடக்கக்கூடிய விபத்துகளில் 75 சதவீதம் மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால்தான் நிகழ்கிறது எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த மதுபோதையினால் குடும்பத்தில் தகராறு, தகாத உறவு, தகாத செயல்பாடுகள் நடைபெறுகிறது. இப்போது கூட மெரினா பீச்சில் போதையில் ஒருவர் கழுத்தை அறுத்து நகைகளைத் திருடியுள்ளார்.
போதையில் தாம் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் தன்னிலை மறந்து வேறொரு நிலைக்குப் போய்விடுகிறார்கள். இந்த அளவிற்குப் போகும்பொழுது, வருங்காலத்தில் உலகத்திலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா எனச் சொல்லும்பொழுது, இந்த மனித வளத்தை நாம் பேணிக்காக்க வேண்டும்.
இந்த இளைய சமுதாயம்; இளைஞர் படை; இந்த மனிதவளம் சீரழிந்து போய்விட்டது என்றால் இந்தியப் பொருளாதாரம் வருங்காலத்தில் பாதிக்கும் என்ற அடிப்படையில், இதற்குக் கண்டிப்பாக ஒரு விழிப்புணர்வு தேவை என்ற அடிப்படையில் இந்த உண்ணாவிரதத்தை நடத்த 19 மாநகராட்சிகளில் அனுமதி கேட்டு இருந்தேன். ஆனால், இரண்டு இடங்களில் வாய்மொழியாகவும், இங்கு எழுத்துப்பூர்வமாகும் அனுமதி கிடைத்தது” என்று பேசினார்.