கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் விபத்தில் சிக்கி மாயமான மீனவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. உடலை வைத்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
குமரிமாவட்டம் தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் துறைமுக நுழைவு வாயிலின் அருகே ஏற்பட்ட விபத்தில் சிக்கி இதுவரை 28 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். தேங்காய்பட்டினம் துறைமுகத்தின் கட்டுமானம் சரி இல்லை என்ற கோரிக்கையை மீனவர்கள் பல ஆண்டுகளாக கூறிவருகின்றனர். துறைமுகத்தை புனரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.
தற்போது மீண்டும் ஒரு மீனவர் மூன்று நாட்களுக்கு முன்பு தனது சிறு படகில் தனியாக மீன் பிடித்தது திரும்பும் போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். மீனவரை தேட அப்பகுதி மக்கள் தங்கள் சொந்த படகுகளில் சென்று அம்மீனவரின் உடலை தேடி கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் மீனவரின் உடலை வைத்து கொண்டு, தொடர் விபத்து குறித்தும் மீனவரின் உடலை தேடுதல் பணியில் மீன்வளத்துறை உதவாததை கண்டித்தும் அப்பகுதி மீனவர்கள் போராட்டம் நடத்தினர். மீன் ஏல கூட்டத்தில் நடந்த இந்த போராட்டத்தில் 1000 பேருக்கும் அதிகமான மீனவர்கள் கலந்து கொண்டனர். இங்கு உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணங்கள் வழங்க வேண்டும், இந்த துறைமுகத்தை புனரமைக்க வேண்டும் எனவும் அது நடைபெறும் வரை போராட்டம் ஓயாது எனவும் தெரிவித்துள்ளனர்.