தேனி அருகே உள்ள தனியார் மசாலா கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 80 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது.
தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியில் ஈஸ்டன் தனியார் மசாலா நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தை கேரளாவைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபர் நடத்தி வருகிறார். இங்கு தேனி, போடி, கோடாங்கிபட்டி, பிசிபட்டி, வீரபாண்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆண், பெண் தொழிலாளர்கள் வேலைபார்த்து வருகின்றனர். இந்த ஈஸ்டன் மசாலா கம்பெனியிலிருந்து தயாரிக்கப்படும் மசாலா பொருட்கள் பல்வேறு ஊர்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் திடீரென கம்பெனியின் பின்பகுதியிலிருந்து புகை மூட்டம் வருவதை கவனித்த ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது ஒரு பகுதியில் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அதைக்கண்டு ஊழியர்கள் பதறி அடித்து வெளியே வந்தனர். இதுகுறித்து, தேனி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரியப்படுத்தப்பட்டது. உடனே தீயணைப்புத்துறையினர் நான்கு வாகனங்களில் இந்த மசாலா கம்பெனிக்கு வந்து தீப்பிடித்த பகுதிகளில் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீ தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் பரவ தொடங்கியது. இதனால் தீயை அணைக்க
தீயணைப்புத்துறையினரால் முடியாததால் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களிலிருந்தும் தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டன. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. காலை 8 மணிக்கு பிடித்த தீயை தொடர்ந்து 5மணி நேரம் வரை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடினர். இந்த விபத்தில் நிறுவனத்தில் இருந்த மிளகாய், மல்லி, சீரகம், சோம்பு, பட்டை, கிராம், மிளகு உட்பட சில மசாலா பொருட்கள் தீயில் எரிந்து சாம்பலானது. இதனுடைய மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் இருக்கும் என ஊழியர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்திற்கான காரணம் குறித்து
பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
காலையில் புகைமூட்டத்தின் மூலம் தீ பரவியதை கண்டதால் கம்பெனியில் வேலைபார்த்து கொண்டிருந்த ஒட்டுமொத்த தொழிலாளர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்கள். இச்சம்பவத்தை கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் பல்லவிபல்தேவ், மாவட்ட எஸ்பி பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனர். அதோடு இந்த மசாலா நிறுவனத்தில் தீயணைப்பு சாதனங்கள் பொருத்தப்பட்டிருந்தது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. பிரபல மசாலா தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்து தேனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.