திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவராக கீதா என்பவர் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகத்தில் இவரது கணவர் துளசிராமனின் தலையீடு காரணமாக முறைகேடான ஆவண பரிமாற்றம், பஞ்சாயத்து நிதி கையாடல் போன்ற விதிகளுக்கு முரணான செயல்கள் அரங்கேறி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஊராட்சி மன்ற தலைவியின் அலுவலக இருக்கையை கணவர் துளசிராமன் ஆக்கிரமித்துக் கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக புகார் எழுந்தது.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் பதவியை சட்டத்துக்கு புறம்பாக பயன்படுத்தி ஊராட்சி நிர்வாகத்திற்கு நிதி இழப்பு செய்ததாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் கீதாவை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். கணவரின் அதிகார துஷ்பிரயோகத்தால் ஊராட்சி மன்ற தலைவரின் பதவி பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.