தென்காசி மாவட்டத்தின் சிவகிரி சமீபம் உள்ள குமாரபுரத்தில் குடியிருப்பவர் ராமர் அம்மாள் (72). மூதாட்டியான இவரது கணவர் கோமதி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே காலமாகிவிட்டார். எனவே ராமர் அம்மாள் மட்டும் அந்த வீட்டில் தனியே வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் பின்பக்க மாடி வழியாகப் புகுந்த மர்ம நபர்கள் ராமர் அம்மாளின் கழுத்தையறுத்து அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலி, காதில் கிடந்த 1 பவுன் கம்மல் உள்ளிட்ட நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். அதேசமயம் பீரோலில் உள்ள பணம் கொள்ளையடிக்கப்படவில்லையாம்.
காலையில் வெகு நேரமாகியும் வீடு திறக்கப்படாமலிருந்ததைக் கண்ட அக்கம் பக்கத்தினர், கதவு பூட்டப்படாமலிருப்பதைக் கண்டு சந்தேகமடைந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது ரத்தம் கொட்ட ராமர் அம்மாள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். பின்னர் ராமர் அம்மாள் மேல் சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியங்குடி டி.எஸ்.பி. சக்திவேல், சிவகிரி இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் ஆகியோர் விசாரனை நடத்தினர். இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
மூதாட்டியின் வீடு வந்து போனவர்கள், அல்லது அவர் பற்றி அறிந்தவர்களின் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை போகிறதாம். தனியே இருந்த மூதாட்டி கழுத்தறுபட்ட சம்பவம், அந்தப் பகுதியில் பீதியைக் கிளப்பியிருக்கிறது.