புதுக்கோட்டையில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில் வாசலில் பிச்சை எடுப்பதற்கு சீனியர் பிச்சைக்காரப் பெண் ஒருவர் ஆயிரம் ரூபாய் மாமூல் வசூலிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகள் புகார்கள் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட முதியவர்,மூதாட்டி
புதுக்கோட்டை இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான சாந்தநாத சாமிகள் மற்றும் வேதநாயகி அம்பாள் சன்னதி கோயில் முன்பு, யார் பிச்சை எடுத்தாலும் தனக்கு மாமூல் கொடுக்க வேண்டும் என சீனியர் பிச்சைக்காரப் பெண்ணொருவர் பிச்சைக்காரர்களிடம் பணம் வசூலித்து வந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்தக் கோவிலில் பிச்சை எடுத்துவந்த முதியவர் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ''ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் இங்கே உட்காந்து பிச்சை எடுக்க முடியுமாம்'' என வேதனை தெரிவித்துள்ளார். அதேபோல் அந்தக் கோவிலில் ஏற்கனவே கணவருடன் பிச்சை எடுக்கும் மூதாட்டி ஒருவர், தனக்கும் தன் கணவனுக்கும் ஆயிரம், ஆயிரம் ரூபாய் என 2000 ரூபாய் அந்தப் பெண்மணியிடம் கொடுத்து வைத்திருப்பதாக வீடியோவில் வேதனை தெரிவித்திருக்கிறார்.
பணம் வசூலித்த பெண்
இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து இந்தத் தகவலானது உள்ளூர் காவல் நிலையத்திற்குச் செல்ல, போலீசார் இது தொடர்பாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அந்த சீனியர் பிச்சைக்காரப் பெண்ணிற்கு புத்தி சொல்லி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வீடியோ உயர் காவல் அதிகாரிகளுக்கு சென்று சேர்ந்ததையடுத்து, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பதற்கு ஆயிரம் ரூபாய் வசூல் செய்த அந்தப் பெண் தற்போது தலைமறைவாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.