மூன்று ஆண்டுகால தொடர்ந்து போராட்டம் நடத்தி டாஸ்மாக் கடையை மூடவைத்துள்ளனர் பொதுமக்கள், டாஸ்மாக் கடை முடிவுக்கு வந்ததால் பொதுமக்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டதிலும் ஈடுபட்டனர்.
நாகை மாவட்டம் சீர்காழி அருகே மங்கைமடம் கடைவீதியில் அரசு மதுபானகடை பல ஆண்டுகளாக இயங்கி வந்தது. அந்த கடையால் அப்பகுதி மக்களும், மாணவர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பல்வேறு கிராமத்து மக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் மதுபான கடையை கடந்தே செல்லவேண்டிய நிலையே இருந்தது, பொதுமக்களுக்கு இடையூறான அந்த மதுபான கடையை அகற்றக்கோரி கடந்த மூன்று ஆண்டுகளாக இளைஞர் கூட்டமைப்பினர், பொது மக்களை திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் திருவெண்காடு டாஸ்மாக் கடையை மூட மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.கடை மூடப்பட்டதை அறிந்த மங்கைமடம் கிராம மக்கள் ஒன்றிணைந்து மதுபான கடையில் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி மாலை அணிவித்தனர். பின்னர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அப்பகுதி இளைஞர்கள் கூறுகையில், "பெண்கள், பள்ளி மாணவர்கள் இந்த சாலையில் நடக்கவே அஞ்சும் நிலை இருந்தது. பொது மக்களுக்கு இடையூறாக இருந்த கடை மூடப்பட்டதால் நிம்மதி அடைந்துள்ளோம்." என்கிறார்கள்.