சமீப காலங்களாகவே அரசுப் பள்ளிகளில் மாணவ மாணவிகளை கழிவறையை சுத்தம் செய்ய பணித்ததாக ஆசிரியர்கள் மீது புகார் எழுந்து ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள கிளவிபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட மொத்தமாக 6 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியரும் சில ஆசிரியர்களும் மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய பணித்ததாகக் கூறப்படுகிறது. அதைப்போல் ஆசிரியர்கள் கழிவறையைப் பயன்படுத்துவதற்கு தேவையான தண்ணீரை மாணவர்கள் எடுத்து வர வேண்டும் என வேலை வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மாணவர்கள் பெற்றோர்களிடம் தெரிவிக்க பெற்றோர்கள், பொதுமக்கள் என அனைவரும் பள்ளி முன்பு ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து சென்றனர்.