கரோனா எனும் கொடிய வைரஸ் ஒட்டுமொத்த மக்களையும் கதிகலங்க வைத்து வருகிறது. பள்ளிகள், கல்லூரிகள் தொடர்விடுமுறையால் குழந்தைகள் வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு என்கிற பெயரில் பாடம் கற்பித்து வருகின்றனர்.
ஆனால் அரசு பள்ளி மாணவர்களோ, மன புழுக்கத்துடன், விடுமுறை திகட்டி வெதும்பி நிற்கின்றனர். அவர்கள் மனரீதியாக பாடத்தை விட்டு வேறு செயலுக்கு சென்றுவிடக்கூடாது, கல்வி பாதையிலிருந்து விலகிவிடக்கூடாது என்பதற்காக ஆசிரியை ஒருவர் மாணவர்கள் இருக்கும் வீடுதேடி சென்று பாடம் கற்பித்து வருவது பெருத்த வரவேற்பை பெற்றிருக்கிறது.
காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக இருக்கும் இரா,மேகலா என்பவர்தான் இந்த அர்ப்பணிப்பு பணியை செய்துவருகிறார். ஆசிரியை மேகலா இயல்பாகவே சமூக நலனிலும், மாணவர்கள் மீதும் அக்கறை கொண்டவராக இருந்ததால் புதுச்சேரி அரசின் நல்லாசிரியர் விருதை பெற்றிருக்கிறார் என்கிறார்கள் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள்.
பலதரப்பட்ட மக்களின் வாழ்த்துகளை பெற்றுவரும் ஆசிரியை மேகலா கூறுகையில்," கரோனா பொதுமுடக்கத்தால் போதும், போதும் என்கிற அளவில் அவர்களுக்கு விடுமுறை கிடைத்துவிட்டது. தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் கவனம் செலுத்தவைத்துள்ளனர். ஆனால் அரசு பள்ளி மாணவர்களின் மனநிலை கேள்விக்குறியாக மாறியிருக்கின்றது. இதை நான் நன்கு உணர்ந்தேன். என்னிடம் படிக்கும் மாணவர்களின் நலன் குறித்து விசாரிப்பதற்காக திருநள்ளாறு, அதிபடுகை, பூ மங்கலம், பிள்ளைதெருவாசல் போன்ற கிராமங்களுக்கு அவ்வப்போது சென்று வந்தேன். அவ்வப்போது அவர்களுடன் உரையாடினேன் அப்போது மாணவர்கள் நோட்டு புத்தகங்களை எடுத்து, எழுதவோ படிக்கவோ செய்வதில்லை, அதை முற்றிலுமாக மறந்துவிட்டார்கள் என்பதை புரிந்து கொண்டேன். அதோடு கிடைக்கும் செல்போனை பயன்படுத்தி மனரீதியாகவும், உடல் ரீதியாக மாற்றமடைவதையும் உணர்ந்தேன்.
எப்போதுமே விடுமுறையை விரும்பும் மாணவர்கள் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் படிக்க வேண்டும் என்று விரும்புவதை நான் பார்த்தேன் அதன் பிறகு பிள்ளை தெரு வாசல் பகுதியில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் வீட்டுத் திண்ணைகளில் அமர்ந்து காலை ஏழு முப்பது மணி முதல் 9 மணி வரையும் திருநள்ளாறு அருகே உள்ள கிராமப் பகுதியில் மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் கடந்த 10 நாட்களாக பாடம் நடத்தி வருகிறேன்.
பாடத்தை மட்டும் நான் கற்றுக்கொடுக்கவில்லை, கையெழுத்து பயிற்சி ஸ்போக்கன் இங்கிலீஷ், தமிழ் இலக்கியத்தை வாசிக்க பழகுதல் கணித வாய்ப்பாடுகளை நினைவு கூறுதல் போன்ற பயிற்சிகளை அளித்து வருகிறேன்." என்கிறார் ஆர்வமாக.