Skip to main content

'கிழிந்த ஓலைக் குடிசை; அனல் கக்கும் ஆஸ்பெட்டாஸ் சீட்'-வேதனையளிக்கும் அங்கன்வாடிகள்

Published on 19/09/2024 | Edited on 19/09/2024

 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கிழிந்த ஓலைக் கொட்டகையிலும், அனல் கக்கும் ஆஸ்பெட்டாஸ் கொட்டகையிலும் சிறு குழந்தைகள் பயிலும் அங்கன்வாடிகள் செயல்பட்டு வருகிறது வேதனை அளிக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கொத்தக்கோட்டை ஊராட்சியில் சிறு குழந்தைகள் பயிலும் 4 அங்கன்வாடி மையங்கள் உள்ளது. இதில் கொத்தக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒரு பகுதியில் 1997-1998 ம் ஆண்டு கட்டிடம் கட்டி பிரகதம்பாள்புரம் அங்கன்வாடி மையம் செயல்பட்டுள்ளது. இந்த கட்டிடம் பல வருடங்களாக பழுதடைந்த ஆபத்தான நிலையில் நிலையில் இருந்ததால் கடந்த ஒருவருடமாக அப்பகுதியில் உள்ள சுமார் 7 அடி உயரத்தில் ஆஸ்பெட்டாஸ் கொட்டகையில் வாடகைக்கு 20 குழந்தைகளுடன் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆஸ்பெட்டாஸ் கொட்டகைக்குள் சுற்றிலும் சிமெண்ட் கற்கள் வைத்து கட்டப்பட்டு மேற்கூரையும் தாழ்வாக உள்ளதால் கடுமையான வெப்பத்தின் அனலைத் தாங்க முடியாததால் பெற்றோர்கள் குழந்தைகளை மதிய உணவு நேரத்திற்கே அழைத்துச் சென்று வருகின்றனர். அங்கன்வாடிகள் குழந்தைகளின் அடிப்படை கல்விக் கூடமாக செயல்பட வேண்டிய நிலையில் நிரந்தரமான கட்டிடம் இல்லாததால் இப்படி உணவுக்கான கூடமாக மாறியுள்ளது.

இதேபோல இதே ஊராட்சியில் உள்ள தோப்புப்பட்டி அரசுப் பள்ளி வளாகத்தில் 1995-1996 ல் கட்டப்பட்டு செயல்பட்டு வந்த அங்கன்வாடியும் பழுதடைந்ததால் ஒரு வருடத்திற்கு முன்பே மூடப்பட்டு அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டு வீட்டின் தாழ்வாரத்தில் கிழிந்த ஓலைக் கொட்டகையில் 25 குழந்தைகளுடன் செயல்பட்டு வருகிறது. ஒரே ஊராட்சியில் குழந்தைகள் பயிலும் 4 அங்கன்வாடிகளில் 3 அங்கன்வாடிகள் பழுதாகி உள்ளதால் ஏழைக் குழந்தைகள் ரொம்பவே பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து கிராமத்தினர் கூறும்போது, 'ஏழைகள் தான் தங்கள் குழந்தைகளை பால்வாடி க்கு அனுப்புகிறார்கள். பால்வாடியில் மதிய உணவோடு அடிப்படை கல்வியையும் கொடுத்து பள்ளி செல்ல ஆயத்தமாக்கும் மையமாக உள்ளது. ஆனால் கொத்தக்கோட்டை ஊராட்சியில் மட்டும் இப்படி அனல் கக்கும் ஆஸ்பெட்டாஸ் கொட்டகையிலும், கிழிந்த கீற்றுக் கொட்டகையிலும் இயங்குவது வேதனையாக உள்ளது. புதிய கட்டிடம் கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் பலனில்லை. ஏனென்றால் அதிகாரிகளின் குழந்தைகள் தான் எல்கேஜி, யுகேஜி க்கு பணம் கட்டி அனுப்பிடுவாங்களே அப்பறம் ஏழைக் குழந்தைகள் பற்றி அவங்களுக்கு என்ன கவலை' என்கின்றனர்.

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். விரைவில் நல்ல நடவடிக்கை இருக்கும் என்று நம்புவோம்.

சார்ந்த செய்திகள்