திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர். அப்போதும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதனையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல்துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரைத் தீவிரமாக தேடி வந்தனர். இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி (04.05.2024) சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக 9 தனிப்படைகள் அமக்கப்பட்டு 7 வது நாளாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜெயக்குமார் தனசிங்கின் மரண வழக்கில் அவரது செல்போனை கிணற்றுக்குள் தேடும் பணி 2 வது நாளாக தொடர்ந்து வருகிறது. ஜெயக்குமாரின் செல்போன் அவரது தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் கிடக்கலாம் என்ற அடிப்படையில் கிணற்று நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேற்றிரவு பணியாளர்களைக் கொண்டு கிணற்றுக்குள் 7எச்.பி. நீர் மூழ்கி மோட்டாரை இறக்கி கிணற்று நீரை வெளியேற்றும் பணி தொடங்கியது. அதன்படி சுமார் 17 மணி நேரத்திற்கு மேலாக கிணற்று நீரை நீர் 7 குதிரைத் திறன் (H.P.) கொண்ட மூழ்கி மோட்டார் மூலம் வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. கிணற்றுக்குள் 4 பக்கங்களிலும் உள்ள நீரூற்றுகள் இருப்பதால் நீரை வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் பதினேழு மணி நேரத்திற்கு மேலாகியும் கிணற்று நீரை இன்னும் முழுமையாக வெளியேற்ற முடியவில்லை என்று கூறப்படுகிறது.