மாற்றுப் பாலினத்தோர் இனி மனநோய் பட்டியலில் சேக்கப்படமாட்டனர் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் மாற்றுப் பாலினத்தோரை மருத்துவத்துறையில் இதுவரை பாலின அடையாள குழப்பம் அல்லது மனநோய் பாதிக்கப்பட்டவர்கள் என்றே குறிப்பிட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த 18ஆம் தேதி ஜெனிவாவில் நடந்த மாநாட்டில் உலக சுகாதார நிறுவனம் ஒரு புதிய வரையறையை வெளியிட்டுள்ளது. அதில் கேம்மிங்க் டிசாடர் என பல்வேறு புதிய நோய்களுக்கான வரையறையை வெளியிட்டது.
அதில் நோய்கள் மற்றும் அது தொடர்புடைய சுகாதார சிக்கல்களின் சர்வதேச புள்ளிவிவர வகைப்படுத்தல் ICD-11 இல் மாற்றுப் பாலினத்தோரை மனநோய் பட்டியலில் சேர்க்கக்கூடாது எனவும் இதனால் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் அடக்குமுறை குறையும் என கூறப்பட்டது. இந்த வரையறை வரும் 2019 மே மாதம் உலக சுகாதார நிறுவனம் நடத்தும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டு உலகம் முழுவதும் அமல்படுத்தபடும் என அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை உலகெங்கிலும் உள்ள மாற்றுப் பாலின சமூகமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுக் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த மாற்றத்துக்காக போராடிய உலகெங்கிலும் உள்ள அமைப்புகளுக்கும், சமூக ஆர்வாலர்களுக்கும் அவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக திருநங்கை சமூகப் போராளி கிரேஸ்பானுவிடம் பேசியபோது, ஜெனிவாவில் நடைபெறும் உலக சுகாதார மாநாட்டில் மாற்றுப் பாலினத்தோரை மனநோய் பட்டியலில் சேர்க்கக் கூடாது என்ற அறிவிப்பு வெளியானது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என அவர் கூறினார்.