"வாழ்த்துகள் தமிழிசை.! முதன் முறையாக எதார்த்தத்தைப் பேசியதற்கு.!" என பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து மழைகளை சமூக வலைத்தளங்களில் பதிந்து வருகின்றனர் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதி இஸ்லாமிய பொதுமக்கள்.
"திருநெல்வேலி மாநகரத்தின் மேலப்பாளையம் பாகிஸ்தானிலா இருக்கிறது" ?- எனக் கேட்டிருக்கின்றார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை. எங்களுக்கும் அந்த கேள்வி உள்ளது. எந்த திட்டம் அறிவிக்கப்பட்டாலும் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஒரு பகுதி உண்டு என்றால் அது மேலப்பாளையம் ஆகத்தான் இருக்கும். பாதாளசாக்கடை இணைப்புக்கு வைப்புத்தொகை செலுத்தி வருடக்கணக்கில் ஆகியும் எல்லா பகுதிகளிலும் வரும் பாதாள சாக்கடை திட்டம் இந்த பகுதிக்கு மட்டும் வரவே வராது..அடக்க ஸ்தலம் வேண்டும் என்றாலும் வீதிக்கு வந்து கதறினால் மட்டுமே கிடைக்கும். ஊரில் இருந்து வெளியே செல்ல மாற்று சாலைகள் கிடையாது. ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியில் போதுமான வங்கி கிளைகளோ தானியங்கி பண இயந்திரங்களோ (atm) கிடையாது. திட்டமிட்டு இந்த பகுதியில் மட்டும் மாநகராட்சி வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். வேலைவாய்ப்புகளில் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே வாய்ப்புகள் மறுக்கப்படும். முக்கிய அரசியல் கட்சிகள் கூட இப்பகுதியை சேர்ந்த சொந்த கட்சிக்காரர்களுக்கு கட்சி பொறுப்புகளில் வாய்ப்பு மறுக்கப்படும். ஆனால் ஹைதராபாத்தில் அசம்பாவிதம் நடந்தால்கூட இங்கு காவலர்கள் குவிக்கப்படுவர். ஆதலால் எங்களுக்கும் மேலப்பாளையம் மாநகரம் இந்தியாவில் இருக்கிறதா..? என சந்தேகம் வந்தது உண்டு. மேலும்., "செங்கோட்டையில் ஏராளமான தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர்" என்று கூறியும் இருக்கின்றார். சொந்த கட்சிக்காரங்க என்று பாராமல் உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு பாராட்டுக்கள்." என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் மேலப்பாளையம் பகுதி இஸ்லாமிய பொதுமக்கள். இந்த பதிவு வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்க ஒன்று.
முன்னதாக, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக செங்கோட்டை சென்ற பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆலங்குளத்திலேயே போலீஸாரால் நிறுத்தி வைக்கப்பட, அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் பேசியவர், "பா.ஜ.க.ஆட்சியில் ஒரு குண்டு வெடிப்பு கூட கிடையாது. குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் பாதுகாப்பு அளிக்கின்றது காவல்துறை. அதுபோக, செங்கோட்டையில் தீவிரவாதிகள் இருக்கின்றனர். நெல்லையிலுள்ள மேலப்பாளையம் பாகிஸ்தானில் இருப்பது போல் இருக்கின்றது." எனக் கூறிவைத்தது தான் தற்பொழுது எதிர்வினையாற்றி வருகின்றது.