தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து பல்வேறு அரசுத் துறைகளில் திருத்தங்களைச் செய்துகொண்டிருக்கிறது. திமுக அரசால், அரசுத் துறைகளின் பெயர்கள் மாற்றப்பட்ட நிலையில், துறைகளில் முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் செய்த முறைகேடுகள் மீது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பால்வளத்துறையில் முறைகேடாகப் பணி நியமனம் செய்யப்பட்டதாகப் புகார்கள் எழுந்த நிலையில் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அத்துறையின் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். அதேபோல், இந்து சமய அறநிலையத்துறை கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் மீட்கப்படும் என அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்த நிலையில் பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிமுக கூறும் நிலையில், ''கடந்த ஆட்சியில் நடைபெற்ற குளறுபடிகளைச் சரி செய்வது காலத்தின் கட்டாயம். எனவே, குளறுபடிகளைச் சரி செய்து வருகிறோம். இது யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. புதியதாக 2,200 பேருந்துகளை வாங்க ஜெர்மனியிடம் கடனுதவி பெற்றுள்ளோம். போக்குவரத்து தொழிலாளர்கள் பிரச்சனையில் நியாயமாகச் செயல்படுவோம்'' எனத் தமிழக போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.