கரோனா விவகாரத்தினால் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் இந்த நேரத்திலும் சுய விளம்பரத்திற்காக அமைச்சர் காமராஜ் பத்திரிகையாளர்களை, தான் செல்லுமிடமெங்கும் அழைத்து பேட்டி என்கிற பெயரில் கும்மாளம் அடிப்பது பொதுமக்களையும், பத்திரிகையாளர்களையும் வேதனையடைய செய்துள்ளது.
கரோனா என்னும் கொடூர வைரஸ் உலகையே நடுநடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் நோய் தொற்றில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இன்னும் பரவும் என்கிற அச்சத்தில் பொதுமக்களும், அதிகாரிகளும் நடுங்கிக்கொண்டிருக்கின்றனர்.
இந்தநிலையில் கரோனா வைரஸ் விவகாரத்தில் ஊரடங்கில் இருக்கும் மக்களுக்கு தமிழக அரசு அதாவது இலவச அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஆயிரம் ரூபாய் பணம், ஏப்ரல் மாதத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவித்தது, இந்தத் திட்டம் 2ம் தேதி முதல் துவங்கியிருக்கிறது.

அத்துறையின் அமைச்சரான காமராஜ் தன்னுடைய சொந்த தொகுதி உள்ளிட்ட திருவாரூர் மாவட்டம் முழுவதும் தானே வந்து வழங்கிவைப்பதாக அதிகாரிகள், கட்சிக்காரர்களிடம் அறிவித்து மாவட்டம் முழுவதும் செல்கிறார். அவர் செல்லுமிடமெல்லாம் முன்கூட்டியே அதிகாரிகளிடம் கூறி பத்திரிகையாளர்களையும் தயார் படுத்தி வைக்க உத்தரவிட்டிருக்கிறார்.
அதிகாரிகளும் மறுக்கமுடியாமல் பத்திரிக்கையாளர்களை தயங்கியபடியே இங்குவரவேண்டும், அங்கு வரவேண்டும் என அழைக்கிறார்களாம். அமைச்சர் காமராஜின் சொந்த தொகுதியான நன்னிலம் தொகுதியில், சன்னாநல்லூர், மாப்பிள்ளைகுப்பம், பேரளம், பூந்தோட்டம் என ஒரு ஏரியா பாக்கியில்லாமல் சென்று துவக்கிவைத்து பலரையும் கடுப்பேற்றினார்.
சொந்த தொகுதியோடு நிற்காமல் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட துர்காலய சாலையில் உள்ள நியாயவிலை கடைக்கு சென்று நிவாரண பொருட்களை தன் கையால் வழங்கி துவக்கிவைத்தார். தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களைக் கூற, பத்திரிகையாளர்களோ இவ்வளவுதான் இனிமேல் எங்கேயும் வரமுடியாது. அவரு விளம்பரம் தேடிக்க எங்களை நோய்க்கு ஆளாக்கப்பார்க்குறாரா என கடிந்திருக்கின்றனர்.
இந்தசெய்தியை அதிகாரிகள் அமைச்சர் காதில்போட, திருவாரூர்ல இருக்கிறவங்களை விட்டுடுங்க, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் என எல்லா ஊர்லயும் பத்திரிகையாளர்கள் இருக்காங்களே அவங்களுக்கு சொல்லுங்க என கூறிவிட்டாராம், அதிகாரிகளும், அதிமுகவினரும் கைப்பிசைந்துகொண்டு பின்னால் சென்றிருக்கிறார்கள்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "எப்போதும் போலவே எல்லா இடத்துக்கும் பத்திரிகையாளர்களை கூப்பிடுறாரு, தினமும் இரண்டு பிரஸ்மீட்டாவது கொடுக்கிறார். இன்னைக்கு உள்ள சூழலுக்கு வெளியே நடமாடவே அச்சமா இருக்கு, பத்திரிகையாளர்களுக்கும் குடும்பம் இருக்கு, பத்திரிகையாளர்களுக்கென அரசு நிவாரணமாகவோ, சம்பளமாகவோ கொடுக்கிறதில்ல, பாதுகாப்பு உபகரணங்கள்கூட கிடையாது. ஆனால் அமைச்சருடைய சொந்த விளம்பரத்திற்கு எங்கே சென்றாலும் உடனே அழைத்து பிரஷ்மீட் கொடுக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்பின்போது எல்லாருமே ஒரே இடத்தில் அடிச்சு மோதிக்கிட்டு நிற்குறாங்க. அங்குவருபவர்களில் யாரு உடம்புல என்ன இருக்குன்னு புரியமாட்டேங்குது. இதை அமைச்சர் உணரவும் மறுக்கிறார்." என்று கூறினார்.
அமைச்சர் தரப்போ, "அமைச்சர் யாரையும் அழைக்கிறது இல்ல, அவங்க பத்திரிகையதான் அழைக்கிறார், ஆனா மற்ற பத்திரிகையாளரும் வறாங்க என்ன செய்யமுடியும், வந்தவங்களையும் இடைவேளி விட்டுதான் சந்திக்கிறார்'' என்கிறார்கள்.