கரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழகத்தில் நாளையுடன் 8- ஆம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார். தியேட்டர்கள், பள்ளி- கல்லூரிகள் திறப்பு, புறநகர் ரயில் சேவை, தனியார் பேருந்து சேவை தொடங்குவது உள்ளிட்டவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் காணொளி மூலம் நடைபெற்று வரும் ஆலோசனையில் அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் தொற்று குறையாமல் சீராக பதிவாகி வருவதால் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24- ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது.
இதனிடையே, மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்தி வரும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. ஆட்சியர்களுடன் முதல்வர் நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.