சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று (11/04/2020) மாலை 05.00 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரைப்படி ஏப்ரல் 14- ஆம் தேதிக்கு பின் ஊரடங்கை இரண்டு வாரம் நீட்டிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் கூறுகின்றன.
தமிழக அமைச்சரவை கூட்டம் முடிந்த பிறகு முதல்வர் பழனிசாமி இன்று (11/04/2020) மாலை 06.00 மணிக்கு காணொளி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துக்கிறார்.
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று (11/04/2020) காலை 11.00 மணியளவில் அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்திற்குப் பிறகு நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஒடிஷா மாநில அரசும், பஞ்சாப் மாநில அரசும் ஊரடங்கை நீட்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.