தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், கரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இருப்பினும் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று (29/04/2021) காலை 11.00 மணிக்கு கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், தமிழக காவல்துறை டி.ஜி.பி. திரிபாதி, வருவாய்த்துறைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூர், நெல்லை, தேனி, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகள், கரோனா தடுப்பூசி போடும் பணிகள் குறித்தும், கூடுதல் கட்டுப்பாடுகள் தேவையா? என்பது குறித்தும், மே மாதம் விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக்குப் பிறகு மருத்துவ நிபுணர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்துகிறார். பின்பு, மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் கொடுத்த பரிந்துரைகளின்படி, கரோனா கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை இன்றோ அல்லது நாளையோ தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.