தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நாளை (30/05/2021) இந்த மாவட்டங்களுக்கு நேரில் சென்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வுசெய்கிறார். மேலும் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகளுடன் கரோனா தடுப்பு நடவடிக்கைப் பற்றியும், மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29/05/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஊரடங்கினால் நோய்த் தொற்று எண்ணிக்கை ஓரளவு குறைந்துவருகிறது. மேலும் குறைத்திடவே ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வருவதற்கு அவசியமற்ற நிலையை உருவாக்குவதில் அரசு முழு முனைப்புடன் செயலாற்றிவருகிறது. கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கவனத்தில்கொண்டு நாளை (30/05/2021) கோவைக்கு நேரடிப் பயணம் மேற்கொள்கிறேன். அவசர கால பயணம் என்பதால், கட்சி நிர்வாகிகள் யாரும் நேரில் வரவேற்பதற்கும், சந்திப்பதற்கும் ஆர்வம் காட்ட வேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உணவுக்கு யாரும் பரிதவிக்காத வகையில், 'ஒன்றிணைவோம் வா' செயல்பாட்டின் அடிப்படையில் பசியினைப் போக்கிடும் பணியில் தொடர்ந்து ஈடுபட வேண்டுகிறேன். தமிழகத்தில் ஒருவர் கூட பசியால் வாடவில்லை என்கிற நிலையை உருவாக்குவோம்". இவ்வாறு முதல்வர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.