தமிழகத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை தமிழக அரசு முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில், மாநிலம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நாளை (26/04/2021) முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வர உள்ளது.
இந்த நிலையில், கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் உள்ள வங்கிகளில் சேவை நேரத்தைக் குறைத்து மாநில வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பில், "தமிழகத்தில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளர் சேவை காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணிவரை மட்டுமே இருக்கும். நாளை (26/04/2021) முதல் ஏப்ரல் 30- ஆம் தேதி வரை வங்கி சேவை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. உடல்நலம் பாதிக்கப்பட்டோர், கர்ப்பிணிகள், பார்வை மாற்றுத்திறன் ஊழியர்கள் வீட்டிலிருந்துப் பணிப்புரிய அறிவுறுத்தப்படுகிறார்கள். தமிழகத்தில் உள்ள ஏ.டி.எம்.- கள் 24 மணி நேரமும் செயல்படும். தகுதி வாய்ந்த பணியாளர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வங்கியில் பணியாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு (அல்லது) கிருமிநாசினியைக் கொண்டு கழுவ வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.