தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்துவதா, ரத்து செய்வதா என்பது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் காணொளி காட்சி மூலம் நடைபெற்று வரும் ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இந்த ஆலோசனையில் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் வாட்ஸ் அப், இ- மெயில் மூலம் பெறப்பட்ட கருத்துகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக்கு பின்னர் கல்வியாளர்களிடம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். அதன் தொடர்ச்சியாக, ஆலோசனைக் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில் அறிக்கையைத் தயாரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் நேரில் வழங்குகிறார்.
அறிக்கை அடிப்படையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (05/06/2021) வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.