25 வது தேசிய கராத்தே போட்டி கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள வி.கே.என்.மேனன் உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில் இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அணி அணியாக பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
அந்த போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து ட்ரெடிஷனல் சோட்டா கான் கராத்தே ஆர்கனைசேஷன் மாநில தலைமை பயிற்சியாளர் ஜீவானந்தம் தலைமையில் மாவட்ட பயிற்சியாளர்கள் சுரேஷ், தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழரசன், துணைப் பயிற்சியாளர்கள் முருகேசன், ராஜா, பொன்னையன் ஆகியோர் முன்னிலையில் கீரமங்கலம், கொத்தமங்கலம், வடகாடு, மாங்காடு, அலஞ்சிரங்காடு குருகுலம், அறந்தாங்கி, சிலட்டூர், சுப்பிரமணியபுரம் ஆகிய பயிற்சி மையங்களில் இருந்து 47 வீரர் வீராங்கனைகளும் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் கீரமங்கலம் பகுதியை சேர்ந்த அணி கராத்தே வீரர்கள், வீராங்கனைகள் 22 தங்கம், 26 வெள்ளி, 44 வெண்கலம் என்று அடுத்தடுத்து சாதனை நிகழ்த்தினார்கள். இந்த தொடர் சாதனை என்பது தேசிய அளவில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அலஞ்சிரங்காடு குருகுலம் பயிற்சி மையத்தில் இருந்து சென்ற வீரர், வீராங்கனைகள் 8 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலம் பெற்றுள்ளனர்.
தேசிய அளவில் சாதனை நிகழ்த்திய இளம் கராத்தே விளையாட்டு வீரர்கள், மற்றும் வீராங்கனைகளை அந்தந்த பயிற்சி மையங்களில் பொதுமக்கள் பாராட்டி வரவேற்பு கொடுத்தனர். மேலும் பயிற்சியாளர்கள் மற்றம் சாதனையாளர்களுக்கு விரைவில் பாராட்டு விழா நடத்தப்படும் என்றனர். இது போன்ற விளையாட்டுகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் தேசிய மற்றும் உலக போட்டிகளில் கலந்து கொள்ள உதவிகள் செய்தால் ஏழை எளிய இளம் வீரர், வீராங்கனைகள் மேலும் சாதிப்பார்கள் என்பதே கராத்தே ஆர்வளர்களின் கோரிக்கையாக உள்ளது.