விஜயதசமியை முன்னிட்டு தமிழ்நாட்டில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்படத் தென்மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் பேரணி நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அந்தந்த மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்களிடம் அனுமதி கோரி மனு அளித்தது. ஆனால், அந்த மனு குறித்து காவல்துறை சார்பில் எந்தவித பதிலும் தராததால் கடந்த 13 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ்.சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று அளித்தது.
அவர்கள் அளித்த அந்த மனுவில், ‘இந்தியாவின் 75வது சுதந்திர தினம், அம்பேத்கர் பிறந்த நூற்றாண்டு மற்றும் விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி காவல்துறையினரிடம் மனு அளித்தோம். தமிழகத்தில் பல அரசியல் கட்சிகளுக்கு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஆனால், மதுரை உள்படத் தென் மாவட்டங்களில் உள்ள 20 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பது என்பது அடிப்படை உரிமையை மீறும் செயலாகும். எனவே, ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், இந்த மனுவுக்குத் தமிழக அரசு பதில் அளிக்குமாறு இந்த வழக்கை அக்டோபர் 16 ஆம் தேதி ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கையில், “ஆர்.எஸ்.எஸ் சங்க அமைப்பா? அறக்கட்டளையா? அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்த அரசியல் கட்சியா? என்று எந்தவித தகவலும் இல்லை. மேலும், இந்தப் பேரணியில், கலந்து கொள்பவர்கள் யார் யார்? எத்தனை பேர் இருப்பார்கள்? இந்த பேரணி எங்கு தொடங்கி எங்கு முடியும்? என்று எந்த விபரமும் அளிக்காமல் அனுமதி கேட்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பேரணியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது? அதுமட்டுமல்லாமல், தென் மாவட்டங்களில் தேவர் குருபூஜை உள்ளதால் ஆர்.எஸ்.எஸ்.பேரணிக்குப் பாதுகாப்பு வழங்குவது என்பது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும்” என்று கூறினர்.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், “தமிழக அரசு விதிக்கும் நிபந்தனைக்களுக்குக் கட்டுப்படுவதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அந்த பிராமணப் பத்திரத்தில் பேரணி குறித்த முழு விபரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.