பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலை வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (19/11/2022) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் இ.ஆ.ப., நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் இ.ஆ.ப., கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் இ.ஆ.ப., பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா இ.ஆ.ப., மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி மற்றும் சேலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதில், 15 டிசைன்கள் மற்றும் பல நிறங்களில் சேலைகளும், 5 டிசைன்களில் வேட்டிகளும் இடம் பெற்றிருந்தனர். சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு புதிய டிசைனில் இலவச வேட்டி, சேலை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதனை அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதிக்குள் வழங்க முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.