மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று (07.10.2023) 52வது சரக்கு மற்றும் சேவைகள் வரி கவுன்சில் கூட்டம் காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இணைய வழியாகக் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தின்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “சிறு தானியங்களை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படுகிறது. அதன்படி சிறுதானிய மாவு உணவு தயாரிப்புக்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. சிறுதானிய மாவு உணவு தயாரிப்பு ஜிஎஸ்டி விகிதத்தைக் குறைப்பதால் சத்தான உணவுப் பொருட்கள் மக்களைச் சென்றடையும். சத்தான உணவுப் பொருட்களை நோக்கி பொதுமக்கள் கவனம் திரும்ப இந்த வரி குறைப்பு உதவும்” எனத் தெரிவித்தார்.
அதே சமயம் இந்தக் கூட்டத்தின் போது, மது தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தூய்மையான ஆல்கஹாலுக்கு இரட்டை வரி விதிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, “உயிர் தூய்மை ஆல்கஹால் மீது இரட்டை வரி விதிப்பதில் நிர்வாக நடைமுறை சிக்கல் உள்ளது. உயிர் தூய்மை ஆல்கஹாலை அதிகம் இறக்குமதி செய்யும் மாநிலமான தமிழகத்திற்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். மேலும் சிறுதானிய பொருள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் பரிந்துரையை தமிழகம் ஏற்றுக்கொள்கிறது. சிறுதானிய பொருள் நுகர்வை ஊக்குவிக்கும் வகையில் வருவாய் இழப்பு ஏற்பட்டாலும் முடிவை ஏற்கிறோம்” எனத் தெரிவித்தார்.