பேராசிரியர் க.அன்பழகன் பிறந்தநாளையொட்டி, அண்ணா அறிவாலயத்தில் அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மேலும் பேராசிரியரின் அரசியல் பணியை நினைவு கூறும் வகையில் மாநிலம் முழுவதும் திமுக சார்பாகப் பிறந்தநாள் கூட்டங்களும் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. நேற்று வேப்பேரி பெரியார் திடலில் நடைபெற்ற நிறைவு விழா கூட்டத்தில் முதல்வர் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு பேராசிரியரின் திராவிட இயக்க சித்தாந்த கொள்கையைச் சிலாகித்தனர்.
இந்நிலையில் தமிழக அரசு ஏற்கனவே அறிவித்தபடி பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு நாளையொட்டி பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு க.அன்பழகன் பெயர் சூட்டப்பட்டது. பெயர்ப்பலகை மற்றும் நூற்றாண்டு வளைவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது " எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி இவ்வையகமும் உயரப் பேராசிரியர் 101-வது பிறந்த நாளில் உறுதி ஏற்போம்! திராவிடவியல் கோட்பாட்டுக்கு விளக்கவுரை தீட்டியவர் மட்டுமல்ல; விளக்காகவும் இருந்தவர் பேராசிரியர்! மாநில சுயாட்சி, மாநில உரிமைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்தவர்" என்று மு.க.ஸ்டாலின் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.