தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் நாளை (07-01-24) மற்றும் நாளை மறுநாள் (08-01-24) ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இதற்கிடையே, நாளை மற்றும் நாளை மறுநாளில் நடைபெறும் இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகளை தற்போது தமிழக தொழில்துறை செய்து வருகிறது.
இதனையடுத்து, சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4ஆம் தேதி ஆலோசனை நடத்தினார். இதில், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast தமிழ்நாட்டில் தொழில் தொடங்க உறுதிசெய்துள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளாதவது, “உலகின் முன்னணி மின்வாகனத் தயாரிப்பு நிறுவனமான VinFast நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதை உறுதிசெய்துள்ளது.
அனைவரது எதிர்பார்ப்புகளையும் விஞ்சி, 16,000 கோடி ரூபாய் மதிப்பில் தூத்துக்குடியில் EVCar மற்றும் மின்கலன் உற்பத்தித் தொழிற்சாலையை VinFast நிறுவனம் அமைக்கவுள்ளது. இது வெறும் முதலீடு அல்ல; தென்தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் ஒரு பெரும் பாய்ச்சல்! தமிழ்நாட்டில் நடைபெறும் நல்லாட்சி மீதும், நம் மாநிலத்தின் ஆற்றல்மிகு மனிதவளத்தின் மீது நம்பிக்கை கொண்டு இந்தப் பெரும் முதலீட்டை மேற்கொள்ளும் VinFast நிறுவனத்தாருக்குத் தமிழ்நாட்டின் முதலமைச்சராக எனது மனமார்ந்த நன்றிகள். 2024ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்னும் இதுபோன்ற பல வியத்தகு சாதனை அறிவிப்புகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.