பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள், பிரச்சாரங்களைத் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிளாஸ்டிக் பைகளை ஒழித்து மஞ்சப்பைகளைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் தற்பொழுது 'மீண்டும் மஞ்சைப்பை' என்ற இயக்கத்தைத் தமிழக முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
கலைவாணர் அரங்கில் நடைபெற்ற துவக்க விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ''பிளாஸ்டிக் பைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும். மக்கள் நினைத்தால் மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த முடியும். அகத்தூய்மை வாய்மைக்கு புறத்தூய்மை வாழ்வுக்கு என்ற வரிகளை கொடுத்தவர் கலைஞர். நாட்டில் அனைத்திலும் முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு சுற்றுச்சூழலை காப்பதிலும் முன்னிலை வகிக்க வேண்டும். சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் கிராமத்தான் எனக் காட்ட மஞ்சப்பையைப் பயன்படுத்தினர். இப்படிப்பட்ட மஞ்சப்பைதான் சுற்றுச்சூழலுக்குச் சரியானவை. அழகான பிளாஸ்டி பைகள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவை'' என்றார்.