தமிழ்நாட்டில் 1996 முதல் 2001ம் ஆண்டு வரை நடந்த திமுக ஆட்சி காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தார். அந்த நேரத்தில் அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி உட்பட மேலும் ஐந்து பேர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
விழுப்புரத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணை வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்றது. இறுதியில் கடந்த ஜூன் 28ம் தேதி போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி நீதிமன்றம் அவர்கள் அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தார். மேலும், இந்த வழக்கை மறு ஆய்வு செய்து தாமே விசாரிப்பதாக நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார்.
இதை எதிர்த்து அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க தடையில்லை என உத்தரவிட்டதோடு, தாமாக முன்வந்து விசாரிக்கும் ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதித்துறையில் உள்ளதற்கு கடவுள்களுக்கு நன்றி என கருத்து தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்.