தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கோடை மழையுடன் தொடங்கினாலும், கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். திருச்சியில் கடந்த சில நாட்களாகவே வெயில் தொடர்ந்து 100 டிகிரிக்கும் அதிகமாகவே காணப்படுகிறது. எனவே நண்பகலில் இருசக்கர வாகன ஓட்டிகள், மற்றும் பாதசாரிகள், வீட்டை விட்டு வெளியே வரவே தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சிக்னலில் (நான்கு சாலைகளில் ஒரு பகுதியில்) நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்காக, திருச்சி மாநகர போலீசார் தற்காலிக மேற்கூரை அமைத்துள்ளனர். இதில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்னலுக்காக காத்திருக்கும்போது, வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று மீள முடிகிறது.கோடையில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க சிக்னலில் அமைக்கப்பட்டுள்ள இந்த தாற்காலிக மேற்கூரைக்கு இருசக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து திருச்சி மாநகரில் உள்ள பல்வேறு சிக்னல்களில் தற்காலிக மேற்கூரை அமைக்க திருச்சி மாநகர போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.காவல்துறையின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தற்காலிகமாக சோதனை முயற்சியாக இந்த மேற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது எனவும், திருச்சி மாநகரில் நிரந்தரமாக இது போன்று மேற்கூரைகள் நிரந்தரமாக மழை, வெயிலில் இருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் சற்று இளைப்பாறும் வகையில் அமைக்கப்படும் என கூறப்படுகிறது.