இந்து மக்கள் கட்சி நடத்திய பாஜக ஆதரவு கூட்டத்தில் 'திமுக கூட்டணி தான் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்' என நடிகை கஸ்தூரி பேசியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்து மக்கள் கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சார கூட்டம் கோவை மாவட்டம் சித்தாபுதூர் பகுதியில் நடைபெற்றது. இதில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் நடிகை கஸ்தூரி கலந்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இறுதி வரை அவர் வரவில்லை.
இதனிடையே பிரதமர் மோடி வருகிறார் என அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்பிறகுதான் தெரிந்தது மோடி போன்ற வேடமிட்டு நபர் ஒருவர் கையை அசைத்தபடி மேடைக்கு வந்தார். இறுதிவரை கஸ்தூரி வருவார் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றத்தில் நிற்க ஒரு வழியாக கூட்டம் முடிந்தது. ஆனால் இறுதியாக கூட்டம் முடிந்த பின் சுமார் பத்து மணியளவில் அங்கு வந்த நடிகை கஸ்தூரி அர்ஜுன் சம்பத் உடன் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது திமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும் என பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.
அவர் பேசியதாவது, 'திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. காரணம் திமுக வலிமையாக இருக்கிறது. திமுக வலிமையாக இருப்பதை விட முக்கியமான காரணம் திமுகவை எதிர்க்க எதிர்க்கட்சி என்று ஒன்று இல்லை. திமுகவை தோற்கடிக்கும் தேர்தலாக இருக்காது. திமுகவிற்கு அடுத்து யார் என்பதை முடிவு செய்யும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்' என்றார்.
கஸ்தூரி பேசுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அர்ஜுன் சம்பத் கூட்டத்திலிருந்து எதுவும் சொல்லாமல் அப்படியே பின்னோக்கி சென்றார்.