தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி (55). இவர் ஊத்துமலை காவல் நிலையத்தில் காவல் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பெயர் மணிமேகலை (48). இவர்களுக்கு விக்னேஷ் (29), வினித் (27) ஆகிய இரண்டு மகன்கள் இருக்கின்றனர். காவல் துணை ஆய்வாளர் பசுபதி தனது குடும்பத்தினருடன் சுரண்டை நகராட்சிக்குட்பட்ட கீழ்சுரண்டை பகுதியில் புதிதாக சொந்த வீடு கட்டி குடியிருந்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 23ஆம் தேதி, பசுபதியின் குடும்பத்தினரான மகன்களும், மனைவி மணிமேகலையும் தங்களது சொந்த வேலைக்காக வெளியே சென்றுள்ளனர். பசுபதி மட்டும் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். அப்போது அவர், வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். வெளியே சென்ற மணிமேகலை, வீட்டிற்கு வந்த பார்த்த போது நுரை தள்ளிய நிலையில் பசுபதி மயக்க நிலையில் இருந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த மணிமேகலை, அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அதனை தொடர்ந்து அவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் பசுபதியை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த சம்பவத்தை அறிந்த சுரண்டை காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, நேற்று (24-09-23) காலை பசுபதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பசுபதி தற்கொலை குறித்து அவரின் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள், பசுபதிக்கு நீண்ட காலமாக நீரிழிவு நோய் இருந்ததால் ஆறாத புண்களால் அவதிப்பட்டு வந்துள்ளார். மேலும், கடந்த சில வாரங்களாக பணியிடத்தில் கடுமையான பணிச்சுமையால் மிகவும் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் என்று கூறினர். அதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.