கோடைக்காலம் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு இடங்களில் குளம் மற்றும் ஏரிகளில் குளிக்கச் செல்லும் மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அண்மையில் சேலம் மாவட்டம் சங்ககிரி கல்வடங்கம் காவிரி ஆற்றில் 10 கல்லூரி மாணவர்கள் குளிக்கச் சென்ற நிலையில அதில் நான்கு பேர் உயிரிழந்தனர். அதேபோல் கடந்த 15ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நொய்யலாற்றில் குளிக்கச் சென்று இரு பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சி அருகே இரண்டு பள்ளி மாணவர்கள் ஏரியில் நீச்சல் பழகிக் கொண்டிருந்த பொழுது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியை சேர்ந்த பாலாஜி, பிரசாந்த். இவர்கள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள். கோடை விடுமுறை என்பதால் கன்னங்குறிச்சி புதிய ஏரியில் நீச்சல் பயில்வதற்காக சென்றுள்ளனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக இருவரும் நீரில் மூழ்கினர். உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் போராடி இருவரின் உடலையும் மீட்டனர். தற்போது இருவரது உடலும் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.