கடந்த 14ம் தேதி அன்று, ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜம்மு ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது, வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை மோதி, பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமணம் அடைந்தனர்.
இவ்வீரர்களின் நினைவாக வீரவணக்கம் செலுத்தும் வகையில் 44 புங்கன் மரக்கன்றுகள் மற்றும் 44 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நீடாமங்கலத்தில் கிரீன் நீடா ஒருங்கிணைப்பாளர் மு.ராஜவேலு தலைமையில் நடைபெற்றது. மரக்கன்றுகள் நடும் நிகழ்வை நீடாமங்கலம் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் சா.செந்தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தார். 44 பனை விதைகள் விதைப்பு நிகழ்வினை நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.காந்தி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நீடாமங்கலம் வர்த்தக சங்க தலைவர் பி.ஜி.ராஜாராமன், நீடாமங்கலம் நற்பணி மன்றத்தலைவர் என்.எம்.மைதீன், செய்தி நாளிதழ்களின் முகவர் பால.சரவணன், டி.கே.வி.பேரவை தலைவர் பாபு, நீடாமங்கலம் அரசு உயர் நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஜி.ரவிச்சந்திரன், நீடாமங்கலம் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர் கே.முத்துகுமார் உட்பட மேல் நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், நீடாமங்கலம் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்க திருவாரூர் மாவட்ட தலைவர் ரியாஸ் நன்றி கூறினார்.
இது குறித்து ராஜவேலு கூறும் போது.. நமது ராணுவ வீரர்கள் எல்லை நின்று நம்மை பாதுகாப்பதால் தான் நாம் நிம்மதியாக இருக்கிறோம். அப்படியான வீரர்களின் மறைவு என்பது தாங்க முடியாத கவலையாகா உள்ளது. அதனால் தான் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் நிறுத்திவிடாமல் அவர்களின் ஒவ்வொரு வீரரின் நினைவாக அவர்கள் பெயரில் ஒரு புங்கன் மரக்கன்றும் பனை விதையும் விதைத்துள்ளோம். இந்த மரங்கள் வளரும் போது அடுத்த சந்ததிக்கு இந்த வீரர்களைப் பற்றி அறிந்து கொள்ள முடியும் என்றார்.