நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திருவாரூர் பெரியார் சிலை முன்பு மாணவர் சங்கத்தினர் திடீர் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நீட் தேர்வினால் மன உளைச்சலுக்கு உள்ளாகிய மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பு ஒட்டுமொத்த நாட்டையும் திரும்பிபார்க்க வைத்தது. அந்த இறப்பின் தீயே இன்னும் அணையாமல் இருக்கும் நிலையில், நீட் தேர்வு தொடர்பாக ஏற்படும் அச்ச உணர்வின் காரணமாக மாணவ, மாணவிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை தொடர்கிறது. எனவே நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும் என அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், தமிழக அரசு விரைவில் கூட இருக்கின்ற சட்டமன்ற கூட்டத்தில் தமிழகத்தில் நீட் தேர்வுமுறைைய அமல்படுத்த மாட்டோம் என அறிவித்து தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் மாணவர் சங்கத்தினர் இன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை முன்பு தடுப்பு கம்பிகளையும் தாண்டி குதித்து சென்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது நீட்டுக்கு எதிராகவும், மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். விரைந்து வந்த நகர காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். கலைந்து செல்ல மறுத்து காவல்துறையினருடன் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.