சென்னை அடுத்துள்ள செங்கல்பட்டு அருகில் உள்ளது பொத்தேரி. இந்த பகுதியில் மத்திய வருவாய் புலனாய்வு குறைவு அதிகாரிகள் கடந்த 29/08/2024, 30/08/2024 ஆகிய இரண்டு நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது சென்னையில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக போதைப் பொருளை கடத்த திட்டமிட்ட கும்பல் பிடிபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த வழியாக சென்ற வாகனத்தை பிடித்து ஆய்வு செய்த போது ஒரு கும்பல் 10 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருளைக் கடத்திச் சென்றது தெரியவந்துள்ளது.
இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு இது தொடர்பாக மேலும் ஆறு பேரை கைது செய்துள்ளனர். அந்த கும்பலிடம் இருந்து 1.30 கோடி ரூபாய் பணமும் 3 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாகவே நேற்று (31/08/2024) பொத்தேரி பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகள் தங்கி இருக்கும் தனியார் விடுதிகள் மற்றும் குடியிருப்புகளில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடியாக குவிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்திய 21 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 21 மாணவர்கள் மற்றும் ரவுடியிடம் இருந்து மொத்தமாக 60 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் போதைப்பொருள் விற்றவர்கள் என கைது செய்யப்பட்ட 21 பேரில் முன்னதாகவே ஏழு மாணவர்கள் காவல் நிலைய பிணையில் வெளிவிடப்பட்டுள்ளனர். தொடர்ந்து 14 மாணவர்கள் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தியபோது கல்லூரி மாணவி ஒருவர் உட்பட 11 மாணவர்களை நீதிபதி சொந்த பிணையில் விடுதலை செய்தார். கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் விற்ற மகேஷ் குமார், சுனில் குமார், டப்லு ஆகிய மூன்று பேரை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.