ஐபிஎல் போட்டியை ரத்து செய்யக்கோரி, சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டுப்போடும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினரால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கெதிராக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையிலான காவிரி உரிமை மீட்புக் குழுவின் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் பல்வேறு போராட்டங்களை பல்வேறு தளங்களில் முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்தக்கூடாது என தமிழக வாழ்வுரிமை கட்சி உட்பட பல்வேறு அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்து வருகின்றன. இதனால் சேப்பாக்கம் மைதானத்தில் சுமார் 4 ஆயிரம் காவல்துறையினர் இன்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், பலத்த காவல்துறை பாதுகாப்பையும் மீறி திடீரென சேப்பாக்கம் மைதானத்தின் நுழைவாயில் அருகே கூடிய தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அங்குள்ள கதவுக்கு பூட்டுப் போட முயற்சித்தனர். இதையடுத்து, அவர்களை காவல்துறையினர் தடுத்து, கைது செய்தனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், ஐபிஎல் போட்டிகளை புறக்கணிக்க கோரியும் அவர்கள் முழக்கமிட்டனர்.