“தண்ணீர் இன்றி கருகும் பயிர்களை காப்பாற்ற எங்களுக்கான பங்கீட்டு தண்ணீரை தா..., வறண்ட காவிரியில் மணல் திட்டுகளையும், கருகும் பயிர்களையும் கண்டு கண்ணீர் வடிக்கும் விவசாயிகள், தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகமே தண்ணீரை திறந்து விடு...” என்று சாலை மறியல், பஸ் மறியல், ரயில் மறியல் என இதுவரை பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனர். போராட்டங்களை பல்வேறு அரசியல் கட்சிகளும் நடத்திவிட்டது. ஆனாலும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை.
இந்த நிலையில் தான் ‘வறண்டது காவிரி! கருகுது பயிர்கள் இருளுது விவசாயி வாழ்க்கை எங்களுக்கான தண்ணீரை தா...’ என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் இன்று விவசாயிகளுடன் அனைத்துக் கட்சிகளும் இணைந்து கடையடைப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் முழுமையாகவும் புதுக்கோட்டை மாவட்டத்தின் கடைமடைப் பாசனப் பகுதியில் கறம்பக்குடி, நெடுவாசல், கைகாட்டி, கீரமங்கலம், மேற்பனைக்காடு, ஆயிங்குடி, வல்லவாரி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம், நாகுடி உட்பட பல பகுதிகளிலும் முழுமையாக கடையடைப்பு தொடங்கியுள்ளது.