புதுச்சேரியில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நோயாளிகள் பாதிப்படைந்தனர்.
புதுச்சேரி மாநில சுகாதாரத்துறையில் செவிலிய அதிகாரிகளின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் காலியாக உள்ள செவிலிய அதிகாரி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பதவி மறுசீரமைப்பு செய்ய வேண்டும்; புதிய செவிலிய அதிகாரிகள் பணியிடங்களை உருவாக்க வேண்டும்; 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி உயர்த்தப்பட்ட நர்சிங் அலவன்ஸ் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; கொரோனா ஒப்பந்த செவிலிய அதிகாரிகளைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; மதர் தெரசா பட்ட மேற்படிப்பு மையத்தில் செவிலிய பயிற்சி முடித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை செவிலியர்கள் 2 மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பணிகளைப் புறக்கணித்த செவிலியர்கள், சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஒன்று கூடி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தியும், புதுச்சேரி அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதனிடையே செவிலியர்கள் போராட்டம் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.