சென்னை, ராயபுரம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஜி.ஏ.சாலையில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று சாலையில் சென்ற பொதுமக்களை விரட்டி விரட்டி கடித்துள்ளது. இவ்வாறு 28 பேரை அந்த நாய் கடித்து குதறியுள்ளது. இதில், முதியவர்கள் சிலர் இந்த நாய் துரத்தும் போது, அதனிடமிருந்து தப்பிக்க ஓடியதில் தவறி விழுந்து காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நாயை அப்பகுதி மக்கள் அடித்தே கொன்றனர்.
இதனையடுத்து, அந்த நாய்க்கு வெறி பிடித்திருக்க வாய்ப்பிருக்கு என்பதால், அதன் உடலைக் கைப்பற்றி, மாதிரிகளைச் சேகரித்து, உடற்கூறு ஆய்வு செய்வதற்காக அனுப்பி வைத்தனர். அப்போது, 28 நபர்களை கடித்த அந்த நாய், வெறி நாய்தான் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுக்கு ரேபிஸ் எனப்படும் வெறி நாய்க்கடிக்கான சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. இதே போல, வேலூர் பகுதியிலும் தெரு நாய்களின் அட்டூழியம் மிகவும் அதிகமாக இருப்பதாக அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், காரைக்குடியிலும் சாலையில் நடந்து சென்ற 7 பேரை ஒரே நாளில் தெரு நாய்கள் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் நாட்டில் நிலைமை இப்படி இருக்க, கேரளாவிலும் தெரு நாய்கள் அட்டூழியம் அதிகரிக்க துவங்கியுள்ளது. கேரளா மாநிலம், திருச்சூர் அருகே உள்ளது பெரிங்காடு கிராமம். இந்தப் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 10 ஆம் தேதி காலை 11 மணியளவில், இந்தப் பகுதியைச் சேர்ந்த கெளதம் கிருஷ்ணா என்ற மூன்று வயது சிறுவன் தனது வீட்டின் எதிரே விளையாண்டுள்ளார். அப்போது அங்கு வந்த தெரு நாய் ஒன்று, யாரும் வெளியில் இல்லாத நேரம் பார்த்து சிறுவன் மீது பாய்ந்து கண்டபடி கடித்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத சிறுவன் கீழே விழுந்து கதறி அலறியுள்ளார். ஆனாலும், அவனை விடாத அந்தத் தெரு நாய் மறுபடியும் கீழே விழுந்த சிறுவனின் தலையில் கடித்துள்ளது. அப்போது வலி தாங்கமுடியாமல் சிறுவன் வேகமாக அலறியுள்ளார்.
குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, வீட்டுக்குள் இருந்த தாய் வெளியே ஒடி வந்துள்ளார். அப்போது, தனது மகனை தெரு நாய் கடித்துக்கொண்டிருப்பதைக் கண்டதும், ஆத்திரமடைந்த தாய், அந்த நாயை விரட்டிச்சென்றுள்ளார். இதற்கிடையில், சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும், கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக்கொண்டு தெரு நாயை அடித்து விரட்டியுள்ளனர்.
அதன் பின்னர், அவர்கள் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பார்த்துள்ளனர். அதில், அமைதியாக விளையாண்டுகொண்டிருந்த சிறுவனை, யாருமில்லாத சமயம் பார்த்து அந்த நாய் கடிப்பதும், பின்னர், கீழே விழுந்து சிறுவன் அலறும் போது மறுபடியும் அந்த நாய் வெறியோடு கடிப்பதும், அதன் பின்னர் சிறுவனின் அம்மா ஓடி வருவதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, தெரு நாய்கள் குறித்து விழிப்புணர்வு வரவேண்டும் என்பதற்காக அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த சிசிடிவி வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த சிசிடிவி காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பார்த்த நெட்டிசன்கள், தெரு நாய்கள் குறித்த தொல்லைகளுக்கு தீர்வு காண்பது அவசியம் எனவும், யாரும் வளர்க்காத நாய்களைக் கண்டறிந்து நகராட்சி ஊழியர்கள்தான் அவைகளுக்கு கருத்தடையோ அல்லது வேறு ஏதேனும் மாற்று வழிகளையோ செய்ய வேண்டும் எனவும் கூறுகின்றனர். மேலும், இந்தத் தெரு நாய்களில், ரேபிஸ் வைரசால் பாதிக்கப்பட்ட நாய்களைக் கண்டறிந்து, முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். கேரளாவில் வீட்டின் எதிரே விளையாண்ட 3 வயது சிறுவனை தெரு நாய் கொடூரமாக கடித்துக்குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.