பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு 9:30 மணி அளவில் மாமல்லபுரத்தின் அருகே மாண்டஸ் புயலின் வெளிவட்ட பாதை கரையைக் கடக்க துவங்கியது. இதன் காரணமாக மழையுடன் பலத்த காற்று வீசியது. கிட்டத்தட்ட நேற்று அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுவதுமாக கரையைக் கடந்தது. இதனை சென்னை வானிலை ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்திற்கு தமிழகத்தின் 20 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை 30 சதவீதம் உயர்ந்து காணப்படுகிறது. புயல் மற்றும் தொடர் மழை காரணமாக விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். பீன்ஸ் கிலோ 30 ரூபாயிலிருந்து 70 ரூபாய்க்கும், கேரட் விலை கிலோ 35 ரூபாயிலிருந்து 70 ரூபாய்க்கும் உயர்ந்துள்ளது. கத்திரிக்காய் கிலோ 20 ரூபாயிலிருந்து 40 ரூபாய்க்கும், பாவக்காய் 20 ரூபாயிலிருந்து 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.