சிதம்பரம் நடராஜர் கோவிலில் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்துவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்க்குழு உறுப்பினர் சங்கமேஸ்வரன் தலைமை தாங்கினார், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா, நகர் மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட கட்சியின் மாவட்டக்குழு மற்றும் நகர்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் சிதம்பரம் நடராஜர் கோயில் உள்ளது. இது வரலாற்று சிறப்புமிக்க கோவில் மட்டுமல்லாமல் தொல்லியல் துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிதம்பரத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது கோவிலானது தற்போது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்தக் கோயில் கடந்த 10 ஆண்டுக்கு முன் இந்து அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் பொழுது மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்ட கோயில் நிர்வாகமானது மீண்டும் தீட்ஷிதர்கள் கைகளுக்கு மாற்றப்பட்ட பின்னால் தொடர்ந்து சர்ச்சைக்குப் பெயர் பெற்ற கோயிலாக மாறி இருக்கிறது என்பதையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்டுகிறது.
குறிப்பாக ஆகம விதிகளுக்கு எதிராகக் கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணத்திற்கு வாடகை விட்டது, கனகசபையின் மீது ஏறி மக்கள் வழிபடுவதற்கு அவ்வப்போது அனுமதி மறுப்பது, கனகசபையின் மீது ஏறி தரிசனம் செய்வதற்கு கட்டணம் பெறுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதேபோல் கோவிலுக்கு வரும் பக்தர்களை அவதூறாக பேசுவது தாக்குவது உள்ளிட்ட சம்பவங்களும் தீட்சிதர்களால் அரங்கேற்றப்பட்டு உள்ளது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கணக்கு வழக்குகளை கேட்டால் அதை தர மறுப்பது உள்ளிட்ட கோவில் நிர்வாகம் சார்ந்த பணிகளில் அரசு அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க மறுப்பது உள்ளிட்ட சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.அதனைத் தொடர்ந்து தற்போது அரசின் எவ்வித அனுமதி இன்றியும் ஆகம விதிகளுக்கு எதிராகவும் கோவிலின் உள் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் குறிப்பாக கோவிலின் நான்கு கோபுரங்கள் அமைந்துள்ள பகுதியில் நந்தவனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கோயிலில் முதல் மற்றும் இரண்டாவது பிரகாரங்களில் அனுமதியின்றி நூறு அறைகள் கட்டப்படுவதாகவும் கூறி கோவிலின் தீட்சிதர் ஒருவரே சென்னை உயர் மண்டபத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருக்கிறார், அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது நந்தவனங்கள் அமைப்பதற்காக 100 ஆண்டுகளுக்கு மேலான பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாகவும் கோவிலின் உட்புறம் கட்டுமானப்பணிகள் மேற்கொள்வது ஆகம விதிகளுக்கு எதிரானது எனவும் குறிப்பிட்டதோடு தீட்சிதர்களுக்குக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளத் தடைவிதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது உயர்நீதிமன்றத்தில் அனுமதியின்றி கட்டுமானங்கள் கட்டப்படுகிறதா? என ஆய்வு செய்து இந்து சமய அறநிலையத்துறை, தமிழ்நாடு தொல்லியல் துறை தரப்பிலும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளனர். எனவே தமிழக அரசு உடனடியாக நடராஜர் கோயிலில் ஆகம விதிகளுக்கு எதிராகவும் சட்ட விதிகளுக்கு எதிராகவும் கட்டப்படுகிற கட்டுமான பணிகள்குறித்து ஆய்வு செய்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். தொடர்ச்சியான விதி மீறல்களிலும் அத்துமீறல்களிலும் ஈடுபட்டு வரும் தீட்ஷிதர்களுக்கு எதிராகவும், நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்ட வர வலியுறுத்தியும் இதுவரை 35 ஆயிரம் மனுக்கள் கடலூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் பொதுமக்கள்மற்றும் பக்தர்கள் அளித்துள்ளனர். இக்கோயில் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில். இது பொதுக்கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமல்ல. தீட்சிதர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கோயிலை நிர்வகித்து வரலாம் நிர்வாகத்தில் தவறுகள் ஏதேனும் நடைபெற்றால் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கலாம் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.