திண்டுக்கல் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து திண்டுக்கல் மாவட்டம் நல்லாம்பட்டி அருகே ஒடுக்கம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான நிலம் ஒதுக்கப்பட்டு அளவீடு செய்யும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் மருத்துவக் கல்லூரிக்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டி பணிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார்.
இதற்காக இப்பகுதியில் மேடை மற்றும் பார்வையாளர்களுக்கான பந்தல் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. கோட்டை போல முகப்பு ஏற்பாடு செய்யப்பட்டு தமிழக முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரது பிரம்மாண்ட பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. மாநாட்டு பந்தலை சுற்றி பல்வேறு அரசுத் துறை சார்பில் கண்காட்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன.
தீயணைப்புத்துறை, கால்நடை பராமரிப்புத் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் அரங்குகள் ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொதுமக்களுக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன. மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக திண்டுக்கல் வரும் முதலமைச்சருக்கு பிரம்மாண்டமான வரவேற்பளிக்க வனத்துறை அமைச்சர் சீனிவாசன் மற்றும் மாவட்ட செயலாளர் மருதராஜ் தலைமையில் அதிமுகவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அதோடு விழாவுக்கான பணிகளையும் மாவட்ட நிர்வாகம் அசுர வேகத்தில் முடிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள்.
அதேபோல் இந்த விழாவில் கலந்துகொள்ள வரும் பொதுமக்களுக்கு கரோனா அச்சத்தை போக்க அனைவருக்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.