தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மாநிலம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பொதுமக்கள் வரிசையில் ஆர்வமுடன் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், ‘நான் ஜனநாயக கடமையை ஆற்றுவேன். ஆனால், வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லை’ என்று விரும்புபவர்களுக்கு தேர்தல் ஆணையம், நோட்டா என்றொரு வாய்ப்பை வழங்கிவருகிறது. ஒவ்வொரு தேர்தலின் போதும், வாக்குப் பதிவு எந்திரத்தில் நோட்டாவுக்கென தனி பட்டன் இருக்கும். ஆனால், இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நோட்டாவுக்கான பட்டன் எந்த வாக்குப் பதிவு எந்திரத்திலும் இல்லை.
இன்று, காலை சென்னை, மயிலாப்பூர், கற்பகவள்ளி பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு சென்ற அறப்போர் இயக்கம் ஜெயராமன் இது குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், நோட்டா இல்லாததால் படிவம் 71-ஐ பயன்படுத்தி நான் வாக்களிக்கவில்லை என்று பதிவு செய்துவிட்டுவந்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், நோட்டா இல்லாததற்கு அவர் கண்டனம் தெரிவித்தார். அதேபோல், வாக்குப் பதிவது என்பது என உரிமை, நான் யாருக்கு வாக்களிக்கிறேன் என்பது என் தனிப்பட்ட ரகசியமும்கூட; அப்படியிருக்க வாக்குப் பதிவு எந்திரத்தில் நோட்டா இல்லாமல், தேர்தல் அலுவலரிடம் படிவம் வாங்கி பதிவு செய்யும்போது எனது தனி உரிமை காக்கப்படுவதில்லை எனும் விதத்திலும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, “நோட்டா பட்டனை மாநிலத் தேர்தல் ஆணையம் மறுத்திருக்கிறது. அதற்கு என் கண்டனம். நோட்டா இல்லாததால், படிவம் 71-ஐ பயன்படுத்தி வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்துவிட்டு வந்திருக்கிறேன். படிவம் 71-ஐ பற்றி நிறைய தேர்தல் அலுவலர்களுக்கு தெரியவில்லை. அதற்கு காரணம் அதனை தெரியப்படுத்த வேண்டிய மாநிலத் தேர்தல் ஆணையம், அதனை செய்யாமல் தவிர்த்திருக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.