Skip to main content

மாநில கல்விக் கொள்கை ரெடி; அறிக்கை சமர்ப்பிப்பு

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
 State Education Policy Ready; Report submission

மாநில கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கை தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்திருந்த தமிழக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு மாநிலத்திற்கான கல்விக் கொள்கை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 2022 ஜூன் 1 ஆம் தேதி   ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழு மாநில அரசுக்கான கல்விக் கொள்கையை வடிவமைக்க கருத்துக்கள் கேட்பதோடு, பரிந்துரைகளை வழங்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.

இந்தக் குழுவின் உறுப்பினர்களாக கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது அக்குழு மாநில கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கையைத் தமிழக முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளது. பொதுமக்கள், மாணவர்கள், மற்றும் கல்வி நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரிடையே கருத்துக்கள் கேட்கப்பட்டு, அக்கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கை தற்போது தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழில் 600 பக்கங்களும், ஆங்கிலத்தில் 500 பக்கங்களும் கொண்ட அறிக்கையில் நீட் தேர்வு இருக்கக் கூடாது; இருமொழி கொள்கையே தொடர வேண்டும்; கல்லூரிகளில் சேர பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமின்றி, பதினொன்றாம் வகுப்பு மதிப்பெண்களையும் கணக்கில் சேர்க்க வேண்டும்; 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படக் கூடாது உள்ளிட்ட பரிந்துரைகள் மாநில கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டு வரும் சூழல் இல்லை” - அமைச்சர் முத்துசாமி

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Minister Muthusamy said total liquor ban cannot be brought in Tamil Nadu

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது.  

அதன்படி மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் 1937 ஐ திருத்தம் செய்யும் வகையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்பதற்காகக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையுடன் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டம் கடுமையாக்க மசோதாவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா  சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.

அப்போது சட்டப்பேரவையில் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி மணி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் முத்துசாமி, “தமிழகத்தில் பூரண மதுவிலக்கை உடனே கொண்டு வர முடியுமா என்பதனை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். பூரண மதுவிலக்கு கொண்டுவருவதில் அரசுக்கும் விருப்பம் உள்ளது. ஆனால், தற்போது அதற்கான சூழல் இல்லை. படிப்படியாக மதுக்கடைகளைக் குறைக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். ஒரு கடையை மூடினால் மற்றொரு கடையில் வாங்கி குடிக்கிறார்கள். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தினால், அண்டை மாநிலங்களிலிருந்து மது உள்ளே வருவதற்கும் வாய்ப்பு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.     

Next Story

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
Tamil Nadu Chief Minister's Letter to 8 State Chief Ministers

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதிய ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. தொடர்ந்து நீட் முறைகேடுகளை கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. நேற்று டெல்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை வளாகத்தில் போராடிய மாணவர்கள் போலீசார் மீது தடியடி நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இன்று  நீட் தேர்வுக்கு எதிராக மீண்டும் ஒருமுறை தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 'மாணவர்களுடைய நலன் கருதி தேசிய அளவில் நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டும். நீட் விலக்கு கோரிய தீர்மானம் தொடர்பான சட்ட முன்வடிவு குடியரசுத் தலைவருக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டு கோப்பு நிலுவையில் உள்ளது வருத்தம் அளிக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற தமிழகத்தின் தொடர்ச்சியான கோரிக்கை மீண்டும் வலியுறுத்துகிறேன்' என தெரிவித்துள்ளதோடு, இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் முதல்வர் கடிதத்தில் இணைத்துள்ளார்.

அதேபோல் தேசிய அளவில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என எட்டு மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். டெல்லி, ஹிமாச்சல், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநில முதல்வர்களுக்கு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும் என தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.