நாமக்கல் அருகே, குடிபோதையில் பெற்றோரையும், தெரு மக்களையும் தினமும் அடித்து உதைத்து ரகளையில் ஈடுபட்டு வந்த ஊதாரிப் பிள்ளையை பெற்ற தந்தையே மரக்கட்டையால் சரமாரியாக அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தொண்டிகரடு முனியப்பன் கோயில் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (58). லாரிகளுக்கு பாடி கட்டும் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி வசந்தி (52). இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் ஆனந்த் (32). இளைய மகன் அரவிந்த் (28). ஆனந்த், கடந்த 5 ஆண்டுக்கு முன்பு மஞ்சு என்பவரை திருமணம் செய்து கொண்டு, தனியாக வசித்து வருகிறார். சங்ககிரியில் உள்ள ஒரு பட்டறையில் வேலை செய்கிறார்.
ஆனந்தின் தம்பி அரவிந்த், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். அவர், பட்டறை மேடு என்ற பகுதியில் உள்ள ஒரு பட்டறையில் கார்களுக்கு டிங்கரிங் செய்யும் வேலையில் இருந்தார். அடிக்கடி வேலைக்கு செல்லாமல், மது குடித்துவிட்டு வீட்டில் பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். சில முறை பெற்றோரையும் தாக்கி உள்ளார்.
இதை தட்டிக்கேட்ட அக்கம்பக்கத்தினரையும் ஆபாசமாக பேசியதோடு, அவர்களையும் தாக்கி உள்ளார். மகனின் நடத்தையால் மனம் உடைந்த தாயார் வசந்தி, காட்டுப்புத்தூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்று விட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் (டிச. 14) நள்ளிரவு 12 மணியளவில், குடிபோதையில் வீட்டுக்கு வந்த அரவிந்த், தனது தந்தையை சரமாரியாக தாக்கினார். அடி தாங்க முடியாமல் அலறி துடித்த மணி, வீட்டிலிருந்து வெளியே ஓடிவிட்டார். சிறிது நேரத்தில் மீண்டும் வீட்டுக்குள் வந்த அவர், மகன் போதையில் தூங்குவதைக் கண்டார். குடிபோதையில் பெற்றோர் என்றும் பாராமல் அடித்து உதைப்பதோடு, ஊர் மக்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்த மகனால் மன உளைச்சலில் இருந்த அவர், அரவிந்த் இனியும் உயிருடன் இருக்கக் கூடாது என்ற முடிவுக்கு வந்தார்.
இதையடுத்து வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து, அரவிந்தை சரமாரியாக தாக்கினார். மண்டை உடைந்த அரவிந்த், அலறினார். ஆனால், ஆத்திரம் தீராத மணி, மகனென்றும் பாராமல் மேலும் சரமாரியாக கட்டையால் தாக்கினார். இதில், அரவிந்த் தலை சிதைந்து அந்த இடத்திலேயே பலியானார்.
மகன் இறந்துவிட்டதை உறுதிப்படுத்திய பிறகே, மணியின் ஆவேசம் தணிந்துள்ளது. அதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணனிடம் நேரில் சென்று சரணடைந்தார். அவர், திருச்செங்கோடு காவல்நிலையத்தில் மணியை ஒப்படைத்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சடலத்தைக் கைப்பாற்றி, உடற்கூறு ஆய்வுக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மணியை காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறையினரிடம் மணி அளித்துள்ள உருக்கமான வாக்குமூலத்தில், ''நாங்கள் குடும்பத்துடன் 45 ஆண்டுகளுக்கு முன்பு திருச்செங்கோட்டில் குடியேறினோம். எங்களுக்கு இரண்டு வீடுகள் இருக்கின்றன. வீடுகளைக் கட்ட பலரிடம் கடன் வாங்கியிருந்தோம்.
கடன் நெருக்கடி அதிகரித்ததால், ஒரு வீட்டை விற்று, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கடனை அடைத்துவிட முடிவு செய்திருந்தோம். அப்படி வீட்டை விற்றால், அந்தப் பணம் முழுவதையும் எனக்கே தர வேண்டும் என்று அரவிந்த் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தான்.
தினமும் குடிபோதையில் என்னையும் என் மனைவியையும் அடித்து உதைப்பான். பெற்ற கடனுக்காக அதை நாங்கள் பொறுத்துக் கொண்டோம். ஆனாலும், நியாயம் பேச வரும் தெரு மக்களையும் குடிபோதையில் அடித்து உதைத்தால் அவர்களால் எவ்வளவுதான் பொறுத்துக்கொள்ள முடியும்?
அரவிந்தால், எங்களுக்கு மட்டுமின்றி, தெருவில் உள்ள மக்களுக்கும் நிம்மதி போய்விட்டது. இந்த நிலையில்தான் டிசம்பர் 14ம் தேதி, அவன் உடம்பு சரியில்லை என்று சொன்னதால், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றேன்.
சிகிச்சை முடிந்த பிறகு, எங்கேயே வெளியே போய்விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு சென்ற அரவிந்த், மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தான். மீண்டும், வீட்டை விற்று பணத்தைக் கொடுக்கும்படி தகராறு செய்து, எங்களை அடித்து உதைத்தான்.
மகனால் நாங்களும், தெரு மக்களும் அமைதியை இழந்துவிட்டோம். அதனால்தான் அவன் இனியும் இருக்கக்கூடாது என்று மரக்கட்டையால் அடி அடியென்று அடித்தே கொன்று விட்டேன்,'' என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மணியை, காவல்துறையினர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில், சேலம் மத்திய சிறையில் மணியை அடைத்தனர்.